ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஒன்றரை கோடி மக்கள் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வழக்கமாக புயல் உருவாகி கரையை கடக்கும்போது 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் கடக்கும். ஆனால், இந்தப் புயல் 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக கடந்ததால் மழையளவும் பாதிப்பும் அதிகமாக இருந்தது.
தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்கள் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளன. இருந்தாலும், பல பகுதிகளில் சாலை மறியல், அமைச்சர் மீது சேறு வீசுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பேரிடர் மீட்புப் படையினர் பல சவால்களுக்கு மத்தியில் 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.