சென்னை: பையனூரில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் திரைப்பட கலைஞர்களுக்கு 90 ஏக்கர் நிலத்தில் 3 ஆண்டுகளுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி, அதற்கான ஆணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.கலைஞர் இருந்தபோது 2010ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் பையனூரில் தெரிவு செய்யப்பட்ட 90 ஏக்கர் நிலத்தில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 65 ஏக்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 10 ஏக்கர், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்திற்கு 8 ஏக்கர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 7 ஏக்கர் என அந்த சங்கங்களின் உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டன.
நிபந்தனைகளின்படி, 3 ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்க வேண்டிய நிலையில், அடுக்குமாடி வீடுகள் கட்டப்படாததால், மேற்கண்ட சங்கங்கள் அரசாணைகளை புதுப்பித்துத்தர வேண்டி 2024ம் ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர். ஆணை வெளியிடப்படும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி, 20.2.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட அரசாணையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திரைப்படத் துறையினரிடம் வழங்கினார். அரசாணைகளை புதுப்பித்து வழங்கியதற்காக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் திரைப்படத்துறையினர் நன்றி தெரிவித்தனர். பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு திரைக் கலைஞர்களுடைய நலனில் என்றைக்கும் முழு அக்கறையோடு செயல்பட்டிருக்கிறது. சென்னை, கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் இடத்தை ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கலைஞர் வழங்கியிருந்தார்.
கலைஞர் குத்தகைக்கு வழங்கிய அந்த 90 ஏக்கர் இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ₹180 கோடி இருக்கும். ஆனாலும், அதே இடத்தை திரைத் துறையின் நலன் கருதி, மீண்டும் அவர்களிடமே குத்தகைக்கு விடுகின்ற வண்ணம் புதுப்பிக்கப்பட்ட அந்த அரசாணையை இன்றைக்கு அவர்களிடத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கண்ட சங்கத்தினர் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பையனூரில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் திரைப்பட கலைஞர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 90 ஏக்கர் நிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசாணை வழங்கினார் appeared first on Dinakaran.