சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. சென்னையில் 3 இடங்களில் இருந்து 3,800 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு 21,904 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் நேற்று 3,537 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன்படி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை , காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மப்சல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சொந்தமாக கார்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பேருந்துகளை போல ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரேநாளில் சென்னையில் இருந்து 35 ஆயிரம் பேர் வரை சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் முலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று சென்னையில் இருந்து 3,780 பேருந்துகளும், பிற முக்கிய இடங்களில் இருந்து 1,850 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,290 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,926 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 94450 14436 ஆகிய அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151 என்ற இலவச எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி இம்முறை 6 முதல் 9 நாட்கள் வரை தொடர்விடுமுறை கிடைப்பதால் பலர் சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அதனால் சுற்றுலா தலங்கள் கொண்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் சொந்த ஊர்களுக்கு செல்வோர் மற்றும் சுற்றுலா செல்வோர் என அதிகப்படியானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 28 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களில் முன்பதிவு அதிகரிக்கும் என்றும், இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான மக்கள் பேருந்துகள் பயணம் மேற்கொள்வார்கள் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Pongalspecial-busservice-Busesdepart-3locations-Chennai
The post பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடக்கம்: சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன appeared first on Dinakaran.