சென்னை: பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நேற்று முதல் ஜன.13ம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 13,536 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 4 நாட்களுக்கு 21,904 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3,150 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,600 முதல் ரூ.3,900 வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல நெல்லைக்கு செல்லும் பேருந்துகளில் படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,810 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,500 முதல் ரூ.4,000 வரையும், இருக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3000ம், திருச்சிக்கு படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.1,680 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.2,200 முதல் ரூ.2,600 வரையும், இருக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.1800வரை வசூலிக்கப்படுகிறது.
கோவைக்கு படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,460 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,300 வரையும், மதுரைக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,330 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.2,700 முதல் ரூ.2,900 வரை வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை நிர்ணயத்தும் அதன்படி வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.
The post பொங்கல் தொடர் விடுமுறை ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.