பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திராவில் கோடிக்கணக்கில் சேவல் பந்தயங்கள் நடைபெற்றன. பலர் வீடுகள், வீட்டு மனைகள், கார்களை இழந்துள்ளனர். பலர் கோடீஸ்வரர்களாக வீடு திரும்பி உள்ளனர். ஆந்திர அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களும் சேவல் பந்தயங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணா, குண்டூர் மற்றும் கோதாவரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக சேவல் பந்தயங்கள் கொடிகட்டி பறந்தன. இதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கை மாறின. வீடு, வீட்டு மனை பத்திரங்கள், நிலப் பட்டாக்கள், பஸ், லாரி, கார், பைக் போன்ற வாகனங்களின் ஆர்.சி புத்தகங்களும் இதில் கை மாறின. இந்த 4 நாட்களும் இரவை பகலாக்கும் பிரகாசமாக விளக்குகள், ராட்சத தொலைக்காட்சி பெட்டிகளுடன் இந்தப் பந்தயங்கள் நடைபெற்றன.