சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் வரும் 20ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக சென்னைக்கு வரும் பிரதான சாலையான பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திங்கள் கிழமை போகி பண்டிகையும், செவ்வாய் பொங்கல், புதன் திருவள்ளுவர் தினம், வியாழன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவே பலரும் சொந்த ஊர் புறப்பட்டனர். இதனால் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற மக்கள் தற்போது மீண்டும் சென்னை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இன்று இரவு சுமார் 8 மணி நிலவரப்படி சென்னை நுழைவு வாயில் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர். முன்னதாக சென்னையிலிருந்து சுமார் 8.73 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றதாக போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15.666 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், 17.01.2025 அன்று 28,022 பயணிகளும், 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி திருப்பப்படும். முடிச்சூர் சாலை சந்திப்பில், மற்ற வாகனங்களையும், தேவையானபோது வெளிவட்ட சாலை தாம்பரம் நோக்கி திருப்ப அறிவுறுத்தியுள்ளது.
The post பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.