சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், சென்னைக்கு திரும்ப ஏதுவாக 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றி இன்று முதல் பயணத்தை தொடங்குமாறும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. அதன்படி கடந்த ஜன.10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலான 4 நாட்களில் சென்னையில் இருந்து தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 7,498 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் பொங்கல் விடுமுறைக்கு மொத்தம் 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து சென்றனர்.