மதுரை: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு டெல்லி, மும்பை, ஐதராபாத், சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் 6 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து ஏராளமானோர் மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வர். இதனால், சென்னை – மதுரை இடையே விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னை – மதுரை இடையே விமான கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரை வர இன்று (ஜன. 11) கட்டணம் ரூ.14,621 என 3 மடங்குக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே போல் நாளை (ஜன. 12) ரூ.10,911, 13ம் தேதி ரூ.7,164 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. அதே போல் பொங்கல் பண்டிகை முடிந்து மதுரை – சென்னை செல்ல விமானக் கட்டணம் ஜன. 19ல் ரூ.10,294 ஆக வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்குக்கு அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் நேரம் ஆக, ஆக மேலும் அதிகரிக்கக் கூடும் என விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிகிறது.
இதேபோல், சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இருமார்க்கத்திலும் இயங்கும் இந்த விமானத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தினமும் இந்த விமானத்தில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து சேலத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி இதில், சென்னையில் இருந்து சேலத்திற்கு இயக்கப்பட்ட இன்டிகோ விமானத்தின் கட்டணம் நேற்று (10ம் தேதி) 3 மடங்கு அதிகரித்தது.
சென்னையில் இருந்து சேலத்திற்கு வழக்கமாக ரூ.2,699 முதல் ரூ.3,300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், நேற்றைய தினம் 3 மடங்கு அதிகரித்து, ரூ.7,000 வரை கட்டணம் உயர்ந்தது. அதனை செலுத்தி பயணிகள் பயணித்தனர். மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் (11ம் தேதி) பயணிக்க நேற்று மாலை 3.30 மணிக்கு கட்டணம் ரூ.6,792 ஆக இருந்தது. இது வரும் 12, 13ம் தேதிக்கான பயணத்திற்கு இன்னும் உயரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post பொங்கல் பண்டிகையால் கிடுகிடு விமான கட்டணம் மும்மடங்கு உயர்வு: சென்னை-மதுரை ரூ.14,000 சென்னை-சேலம் ரூ. 7,000 appeared first on Dinakaran.