புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அதிஷியை போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி முதல்வர் அதிஷியுடன், கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆதாரப்பூர்வமான தகவலின்படி, சமீபத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளுக்கு இடையே சந்திப்பு நடந்துள்ளது. முதல்வர் அதிஷி-யை ஏதாவது பொய்யான வழக்கில் கைது செய்யும் படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் பாஜகவுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை. அரவிந்த் கேஜ்ரிவாலை விமர்சித்தும் அவதூறு பரப்பியும் தான் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.