பழநி : பழநி மலைக்கோயிலுக்கு ரேக்ளா வண்டிகளில் பயணம் செய்து பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் பிப். 5ம் தேதி துவங்க உள்ளது. இருப்பினும், தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவிற்கு கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் தங்களது ரேக்ளா வாகனங்களில் பழநி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம்.
இதன்படி நேற்று பணிக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் 15க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில் பழநி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். வழக்கமாக ரேக்ளா வாகனங்களில் கிரிவீதிகளில் வலம் வருவது வழக்கம். தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக கிரிவீதிகளில் வாகனங்கள் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரேக்ளா வண்டிகளை தனியார் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து ஊர் திரும்பினர்.
The post பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் ரேக்ளா வண்டிகளில் பயணித்து பழநி மலைக்கோயிலில் தரிசனம் appeared first on Dinakaran.