கோவை: பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி நகராட்சி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். தென்னை விவசாயமும், மதிப்பு கூட்டப்பட்ட தென்னை சார்பு பொருட்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்காக தினமும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் கோவை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய பழனி நகராட்சியை தலைமையிடமாக கொண்ட மாவட்ட கருத்து கேட்பு கடிதம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொள்ளாச்சி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொள்ளாச்சியை மாவட்டமாக அனுமதிக்கக்கோரி கையெழுத்து இயக்கம் ஒன்றும் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கக் அரசுக்கு சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.