சென்னை: சென்னை தீவுத்திடலில் நடந்த விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல், பணிச்சுமையை குறைக்கும் விதமாக நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தல், பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்ட \”மகளிர் விடியல் பயணம் திட்டம்\” மூலம் 684 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, 3,727 புதிய பேருந்துகளும், 1500 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 27 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளையும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 114 புதிய பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 31 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 14 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18 புதிய பேருந்துகளும் என மொத்தம் 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 214 புதிய பேருந்துகளில், மகளிரின் சிறப்பான வரவேற்பு பெற்ற “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக” 70 நகர பேருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேருந்துகளின் சேவைகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், பேருந்தில் ஏறி பேருந்தினை பார்வையிட்ட பிறகு, விடியல் பயணம் திட்டத்தில் மூலம் பயன்பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமோழி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post போக்குவரத்து கழகங்களின் சார்பில் 214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.