போடி: போடி சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்களில் பீட்ரூட் அறுவடை தீவிரமடைந்துள்ளது. மேலும் மொத்த வியாபாரிகளும் நேரடியாக வந்து கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். தேனி மாவட்டம், போடியை சுற்றியுள்ள அம்மாபட்டி, சுந்தரராஜ்புரம், பெருமாகவுண்டன் ப ட்டி, தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம், நாகலாபுரம், மாணிக்காபுரம், கரையாம்பட்டி என பல கிராமங்களில் குறுகிய கால பயிராக பீட்ரூட் அறுவடை செய்யப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் பாசனத்தில் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் சாகுபடி செய்தனர். இந்த நிலையில் 70 நாட்களில் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மூட்டைகளாக கட்டி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் மொத்த வியாபாரிகளும் நிலங்களுக்கு நேரடியாக வந்து விலை பேசி பீட்ரூட்டை தேர்வு செய்து மூட்டைகளாக கட்டி சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். உடல் நலனுக்கும், ரத்த விருத்திக்கும் முக்கிய காய்கறிகளில் ஒன்றாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதால் சந்தையில் பீட்ரூட்டுக்கு தேவை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகளும் பீட்ரூட்டை அதிகளவில் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், தற்போது உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவாகவே உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,“பருவமழையின் போது அதிக மழை பெய்ததால் நிலத்தடி பாசனத்தில் போதுமான நீர் பயிர்களுக்கு கிடைத்தது. இதனால் பீட்ரூட்கள் நன்கு செழிப்பாக வளர்ந்துள்ளன. உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால் சாகுபடிக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவழித்த நிலையில் போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் குறைவான விலைக்கே வியாபாரிகளிடம் விற்க வேண்டியுள்ளது’’ என்றனர்.
The post போடி பகுதியில் பீட்ரூட் அறுவடை தீவிரம்: விலை குறைவால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.