சென்னை: சென்னை பெருநகரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 11.08.2023 அன்று “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” (Drug Free Tamil Nadu) என்ற திட்டத்தை துவக்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கஞ்சா உட்பட அனைத்து வகை போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதான கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (Anti Narcotic Intelligence Unit – ANIU) துவக்கப்பட்டு, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரிவினர், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் மேற்பார்வையில், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் தலைமையில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) உதவி ஆணையாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் சென்னை பெருநகரம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து, போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து, போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை முழுமையான செயல்படுத்தி வருகின்றனர்.
இப்பிரிவினரின் தொடர் முயற்சியாலும், தீவிர கண்காணிப்பினாலும், போதைப் பொருள் கடத்தி வருபவர்களின் 50 Synthetic போதைபொருட்கள் குற்றவாளிகளின் கும்பல்கள் (Network) கண்டுபிடிக்கப்பட்டும், அதில் சம்பந்தப்பட்ட 351 பேர் அடையாளம் காணப்பட்டு, 257 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பழைய 4 Synthetic போதைப் பொருள் கும்பலை சார்ந்த குற்றவாளிகள் கண்டறிந்து அதில் 23 நபர்கள் அடையாளம் காணப்பட்டு, 8 நபர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 மாதங்களில் 61 Synthetic Drug வழக்குகள் உட்பட சுமார் 707 போதைப்பொருள் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2,117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 நைஜீரியர்களும், 1 கேமரரூன் நாட்டவரும், 6 வெளி மாநில குற்றவாளிகளும், 2 பெண் குற்றவாளிகளும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 710 கிலோ கஞ்சா மற்றும் 21.5 கிலோ மெத்தம்பெட்டமைன், 1.06 கிலோ மெத்தகுலோன், 39 கிலோ கெட்டமைன், 11.3 கிராம் ஹெராயின், 06 கிராம் கொக்கையின், 156 LSD Stamps மற்றும் 295 MDMA மாத்திரைகள் ஆகிய Sybthetic போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, எதிரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2024ம் ஆண்டில் 300 போதைப்பொருள் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் G.தர்மராஜன், இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் சக்திகணேசன், இ.கா.ப., உதவி ஆணையர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலையில், சிறப்பாக பணி செய்த சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் (ANIU) காவல் ஆய்வாளர்கள் M.ஜானி செல்லப்பா, T.ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் T.ஜெயகுமார், K.பொன் பாண்டியன், M.மருது, S.L.ஜெயராஜ் ஆகியோரை இன்று (13.01.2025), நேரில் அழைத்து வெகுமதியுடன் நற்சான்றிதழ் வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.
The post போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு appeared first on Dinakaran.