ஈஸ்டர் திங்கள் தினத்தில் போப் பிரான்சிஸ் காலமாகி விட்டார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஈஸ்டர் அன்று தோன்றி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வாழ்த்திய மறுநாள், அவரது மறைவுச்செய்தி வந்து இருக்கிறது. இப்போது மறைந்த போப் பிரான்சிஸ்கும், புதிய போப் தேர்வுக்கும் இடையே உள்ள காலம் தொடங்கி விட்டது. கத்தோலிக்க மரபுப்படி ‘இருக்கை காலியாகி உள்ளது’ என்ற காலம் இது. உலகம் முழுவதும் உள்ள கர்தினால்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்வார்கள். உலகம் முழுவதும் மொத்தம் 253 கர்தினால்கள் உள்ளனர். அவர்களில் 138 பேர் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்ய கூடுவார்கள். அவர்களில் இருந்து ஒருவர் தான் புதிய போப்பாக தேர்வு செய்யப்படுவார். இந்த தேர்வு நடைமுறையில் 80 வயதுக்கு மேற்பட்ட கர்தினால்கள் பங்கேற்க முடியாது. தற்போது புதிய போப் தேர்வில் 8 பேர் முன்னணியில் உள்ளனர். அவர்கள் விவரம்:
1. பியட்ரோ பரோலின்(வயது 70, நாடு: இத்தாலி)
வத்திக்கானின் மாநிலச் செயலராக இருக்கும் பியட்ரோ பரோலின், போப் பிரான்சிஸ் தலைமையில் 11 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு போப் பிரான்சிசால், கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். இவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் போப் பிரான்சிஸின் பாரம்பரிய வாரிசாக கருதப்படுவார்.
2. பிரிடோலின் அம்போங்கோ பெசுங்கு(வயது 65, நாடு :காங்கோ ஜனநாயகக் குடியரசு)
ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரின் ஆயர் பேரவைகளின் தலைவர் இவர். போப் பிரான்சிஸ் அறிவித்த திருமணமாகாத மற்றும் ஒரே பாலின தம்பதிகளை ஆசிர்வதிக்க பாதிரியார்களை அனுமதித்த உத்தரவை கடுமையாக எதிர்த்தவர். இன்றுவரை காங்கோவில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. போப் பிரான்சிஸ்சை 2023ல் நேரில் சந்தித்து தனது நிலை குறித்து விளக்கி ஆசிர்வாதம் பெற்றவர்.
3. விம் எய்க் (வயது 71, நாடு : நெதர்லாந்து)
கர்தினால் வில்லெம் ஜேக்கபஸ் எய்க். ஒரு முன்னாள் மருத்துவர். போப் 16ஆம் பெனடிக்டால் 2012ல் கர்தினாலாக நியமிக்கப்பட்டவர். மிகவும் பழமைவாதிகளில் ஒருவர். முதல் திருமணத்தை ரத்து செய்யாத நிலையில் சிவில் மறுமணங்களை பிரான்சிஸ் ஆதரிப்பதை கடுமையாக எதிர்த்தவர்.
4. பீட்டர் எர்டோ (வயது 72, நாடு: ஹங்கேரி)
ஐரோப்பாவின் ஆயர் மாநாடுகளின் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், மரியன்னை பக்தியுமான பீட்டர் எர்டோ, சமகாலத் திருச்சபையின் முக்கிய கர்தினாலாக விளங்கி வருகிறார். எர்டோவை 2003 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் கர்தினாலாக நியமித்தார்.
5. லூயிஸ் அன்டோனியோ டாக்லே (வயது 67, நாடு: பிலிப்பைன்ஸ்)
‘ஆசிய போப் பிரான்சிஸ்’ என்று அழைக்கப்படும் கர்தினால் லூயிஸ்,2012 ஆம் ஆண்டு போப் 16ஆம் பெனடிக்ட்டால் கர்தினால் ஆக்கப்பட்டார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆசிய கண்டத்தில் இருந்து வரும் முதல் போப் ஆவார்.
6. ரேமண்ட் பர்க் (வயது 76, நாடு : அமெரிக்கா)
போப் பிரான்சிஸின் தாராளவாத போக்குகளை விமர்சித்தவர் ரேமண்ட் பர்க். குறிப்பாக செயற்கை கருத்தடை, ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த போப் பிரான்சிஸ் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தவர். போப் 16ஆம் பெனடிக்ட்டால் 2010ல் கர்தினாலாக நியமிக்கப்பட்டவர்.
7. மரியோ கிரேச் (வயது 67, நாடு: மால்டா)
உலக ஆயர் பேரவையின் தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் கர்தினால் மரியோ கிரெச், போப் பிரான்சிஸின் வாரிசாகக் கருதப்படுகிறார். 2020ல் போப் பிரான்சிஸ்சால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
8. மேட்டியோ ஜூப்பி ( வயது 69, நாடு: இத்தாலி)
இத்தாலிய ஆயர் மாநாட்டின் தலைவர், மேட்டியோ ஜூப்பி ரோமில் பிறந்தார். இத்தாலியின் போலோக்னாவின் பேராயர் பதவியில் பணியாற்றினார். அவரை பிரான்சிஸின் வத்திக்கான் நிர்வாகத்தில் இணைத்தார். உக்ரைன் போரை நிறுத்த போப் தூதராக சென்றவர். 2019 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ், அவரை கர்தினாலாக நியமித்தார். இவர்கள் தவிர கனடாவின் மார்க் ஓலெட், ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் ஸ்கொன்போர்ன் ஆகியோரும் புதிய போப்புக்கான பட்டியலில் உள்ளனர். இவர்கள் இருவரும் 80 வயதானவர்கள்.
புதிய போப் தேர்வு எப்படி நடக்கும்?
புதிய போப் தேர்வு சிஸ்டைன் ஆலயத்தில் நடைபெறும். தகுதியுடைய கர்தினால்கள் அங்கு கூடியிருப்பார்கள். எந்தவித தகவல் தொடர்பும் அங்கு இருக்காது. செவ்வக வடிவிலான காகித துண்டுகள் அவர்களுக்கு வழங்கப்படும். அதில்,’ நான் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டேன்’ என்ற வாசகம் இடம் பெற்று இருக்கும். அதன்பிறகு ஒவ்வொருவர் பெயரும் எழுதப்பட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு கர்தினால்களும் அவரவர் விருப்பத்தைச் தேர்வு செய்து, காகிதத்தை பாதியாக மடித்து, தேவாலயத்தின் முன் நடந்து சென்று அறிவிப்பார்கள். இதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்றவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்படுவார்.
மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், வாக்குச்சீட்டுகள் ஊசி மற்றும் நூலால் துளைக்கப்பட்டு, முடிச்சு போட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டு எரிக்கப்படும். அப்போது கரும்புகை தேவாலயத்திற்கு வெளியே வெளியிடப்படும். போப் தேர்வு செய்யப்பட்டு விட்டால் வெள்ளை புகை வெளியிடப்படும். இதை வெளியில் கூடியிருக்கும் மக்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள். அதை தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் புதிய போப் பெயர் அறிவிக்கப்படும். அவர் அங்கு சென்று மக்களுக்கு ஆசி வழங்குவார்.
போப் இறந்தால் என்ன நடக்கும்?
போப் இறந்து விட்டால், அவரது மரணம் உறுதி செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட பின்னர், போப்பாண்டவர் குடியிருப்பை சீல் வைக்க வேண்டும். புதிய போப் பதவியேற்கும் வரை வாடிகனின் நிர்வாக கர்தினால் அனைத்து நிர்வாக மற்றும் நிதிப் பணிகளை மேற்கொள்கிறார். தற்போது கர்தினால் கெவின் பாரெல் இதை நிர்வகிக்கிறார். ஒரு போப் இறக்கும் போது வாடிகன் அலுவலகங்களில் உள்ள அனைத்து நிர்வாக தலைவர்களும் தங்கள் பதவியை இழக்கிறார்கள். அதை தொடர்ந்து கர்தினால்கள் கல்லூரியின் டீன் இறுதிச் சடங்கிற்காக அனைத்து கர்தினால்களையும் வாடிகனுக்கு வரும்படி அழைப்பார்.
போப் இறுதிச்சடங்கு திருப்பலியையும் அவரே நடத்துவார். அந்த பதவியை தற்போது வத்திக்கான் ஆயர்களுக்கான அலுவலகத்தின் ஓய்வுபெற்ற தலைவரான கர்தினால் ஜியோவானி பாட்டிஸ்டா ரே வகிக்கிறார். போப்பின் மரணம், போப்பாண்டவரின் இல்லத்தில் மரணத்தை உறுதிப்படுத்துதல், சவப்பெட்டியை பொது பார்வைக்காக செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு கொண்டு செல்லுதல், இறுதி ஊர்வலம் மற்றும் அடக்கம் போன்ற நிகழ்வுகள் இனி அடுத்தடுத்து முறைப்படி நடக்கும். போப் பிரான்சிஸ் மறைந்த நான்காவது மற்றும் ஆறாவது நாட்களுக்கு இடையில் இவை செய்யப்படும்.
இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ஒன்பது நாட்கள் உத்தியோகபூர்வ துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள கர்தினால்கள் அனைவரும் ரோமில் ஒன்று கூடுவார்கள். 15-20 நாட்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடங்க வேண்டும். ஆனால் கர்தினால்கள் ஒப்புக்கொண்டால் முன்கூட்டியே தொடங்கும்.
யார் ஒரு போப்பை தேர்ந்தெடுக்க முடியும்?
80வயதிற்குட்பட்ட கர்தினால்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்ய முடிவும். தற்போது 80 வயதிற்குட்பட்ட 136 கர்தினால்கள் புதிய போப்பை தேர்வு செய்ய தகுதி பெற்றுள்ளனர். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது. ஆனால் பொது சபைகள் என அழைக்கப்படும் போப் தேர்வுக்கு முந்தைய கூட்டங்களில் பங்கேற்கலாம்.
The post போப் பிரான்சிஸ்க்கு பின் யார்? புதிய போப் பட்டியலில் 8 பேர் appeared first on Dinakaran.