விழுப்புரம்: உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு பெண்ணை விழுப்புரம் வாலிபர் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு மொழி, இனம், அந்தஸ்து என எந்த பாகுபாடும் இல்லை. அன்பும் பாசமும், புரிதலும் இருந்தால் போதும். கடல் கடந்தும், எல்லை கடந்த காதலும் நிச்சயம் கை கூடும் என்று சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால் விழுப்புரத்தில் நிஜ வாழ்க்கையில் அதுபோன்று நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. அதுவும் இருநாட்டுக்கிடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த நாட்டு பெண்ணை காதலித்து விழுப்புரம் வாலிபர் கரம் பிடித்திருக்கிறார். விழுப்புரத்தை சேர்ந்தவர் ெஜயக்குமார் மகன் உதயகுமார் (30). இவர் கோவையில் பி.இ. படித்து முடித்துவிட்டு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயர் படிப்புக்காக ஸ்லோவாக்கியா நாட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு இரண்டாண்டு படிப்பை முடித்ததும் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. பணிக்கு சென்ற நிறுவனத்தில் உக்ரைன் நாட்டு பெண்ணான அனஸ்டாசியா என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இருவீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்துள்ளது. தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள கடந்த 30ம் தேதி அந்நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த காதல் ஜோடிக்கு நேற்று காலை, விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் பெருமாள் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போலவே சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி திருமணக்கோலத்தில் வந்திருந்ததை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
மணமகன் உதயகுமார் கூறுகையில், 2 வருடமாக நாங்கள் காதலித்து வந்தோம். நமது தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்து இங்கு திருமணம் செய்து கொண்டோம். திரும்பவும் நாங்கள் அந்த நாட்டிற்கே செல்ல உள்ளோம், என்றார். மணப்பெண் அனஸ்டாசியா உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். அங்கு ரஷ்யாவுடன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அனஸ்டாசியா தாய் மற்றும் உறவினர்களுடன் வெளியேறி ஸ்லோவாக்கியா சென்று வேலை செய்து வருகிறாராம். அங்கு ஆண்கள் வெளியேற முடியாத நிலையில் அனஸ்டாசியாவின் தந்தை மகள் திருமணத்துக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
* அமெரிக்க பெண்ணுடன் தமிழக வாலிபர் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். மனைவி ஆதிரை மற்றும் 2 மகன்களுடன் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் அவினாஷ், நாசாவில் அறிவியல் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த கேத்தரின் ஓசேவி என்பவரை காதலித்துள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள குலதெய்வ கோயிலான ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ் கலாசார முறைப்படி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமேடையில் புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத நாதஸ்வர இசையுடன் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
The post போரின்போது எல்லை கடந்து மலர்ந்த காதல் உக்ரைன் நாட்டு பெண்ணுடன் விழுப்புரம் வாலிபருக்கு திருமணம் appeared first on Dinakaran.