ரபா: போர் நிறுத்த ஒப்பந்தப்படி மேலும் 6 பணய கைதிகளை ஹமாஸ் நேற்று விடுதலை செய்தது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 21 மாதங்களுக்கும் மேலாக போர் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து வாரம்தோறும் சனிக்கிழமையன்று இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாசும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்து வருகின்றன.
அதன்படி தற்போது வரை 24 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பும், அதற்கு ஈடாக 1,099 பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 6 பணய கைதிகள் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முதலில் தெற்கு காசாவின் ரபாவில் இருந்து தால் ஷோஹாம்(40), அவெரா மெங்கிஸ்டு(39) ஆகிய இரண்டு பணய கைதிகள் அழைத்து வரப்பட்டு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து 20 வயதுக்குப்பட்ட ஓமர் வென்கர்ட், ஓமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹென் மற்றும் ஹிஷாம் அல் சயீத்(36) ஆகிய ஆண் பணய கைதிகளும் விடுவிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை அனைவரும் இஸ்ரேலுக்கு திரும்பி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்து 620 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
* இஸ்ரேலிடம் இரவோடு இரவாக ஒப்படைக்கப்பட்ட உடல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி வியாழனன்று இரண்டு சிறுவர்கள், அவர்களின் தாய் ஷிரி பிபாஸ் உட்பட 4 பேரின் உடல்களை ஹமாஸ் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. இதில் பெண்ணின் உடல் ஹமாஸினால் சிறைப்பிடித்து செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் உடல் இல்லை என்பது தெரியவந்தது.
இதன் காரணமாக பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் ஹமாஸிடம் இருந்து இரவோடு இரவாக மற்றொரு பெண்ணின் உடல் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடல் இஸ்ரேல் எடுத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பெண் ஷிரி பிபாஸ் என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
The post போர் நிறுத்த ஒப்பந்தப்படி மேலும் 6 பணய கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ் appeared first on Dinakaran.