புதுடெல்லி: தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக்கூடியவையாக போலி சித்தரிப்புகள் இருப்பதாகவும், இத்தகைய போலி சித்தரிப்புகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் கமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், மொரிஷியஸ், பூடான், கஜகஸ்தான், நேபாளம், நமீபியா, இந்தோனேஷியா, ரஷ்யா, துனிஷியா உள்ளிட்ட 13 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (EMBs) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமகால தேர்தல் மேலாண்மையின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.