தர்மபுரி: மசாஜ் சென்டரில் பணியாற்றி விட்டு சென்னை திரும்பும் போது, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், போலீசாரிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட சென்னை இளம்பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி பஸ் நிலையத்தில், கடந்த 21ம் தேதி அதிகாலை, பஸ் நிலையத்திற்கு குடிபோதையில் வந்த இளம்பெண்கள் 2 பேர் ரகளையில் ஈடுபட்டனர். வாலிபர் ஒருவருடன், தகாத செயலில் ஈடுபட்டனர்.
ரோந்து பணியில் இருந்த போலீசாரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு இளம்பெண் சிகரெட் புகைத்தவாறே ‘நாங்கள் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள், காசிமேட்டுல கோட்ரஸ்.. பர்மா நகர் தெரியுமா. லோகு அண்ணா தெரியுமா… பர்மா நகர்ல தனசேகர் தெரியுமா.. தனசேகர் வந்தா கிழிச்சி தொங்கவுட்ருவாரு.. அவரு பேர கேட்டா உனக்கு அல்லு உடாது.. உயிரவே உட்ருவ. நீயெல்லாம் பேசவே கூடாது. போய்ட்டே இரு,’ என்றார். போலீஸ்காரரையும், பயணியையும் தகாத வார்த்தையால் திட்டி, அடிக்க பாய்ந்து தள்ளி விட்டனர். பின்னர் கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். இருவரையும் பிடிக்க எஸ்பி மகேஸ்வரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதன்பேரில், இருவர் மீதும் 270, 296(பி), 132, 351(2) ஆகிய பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பேரில், சென்னை விரைந்த தனிப்படை போலீசார், சென்னை எண்ணூர் கமலம்மாள் நகரைச் சேர்ந்த அருண்குமார் மனைவி ஐஸ்வர்யா (27), தினேஷ்குமார் மனைவி கண்மணி (21) ஆகியோரை கைது செய்தனர். நெருங்கிய தோழிகளான இருவரும், குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து வாழ்கின்றனர். அழைப்பின்பேரில், சென்னை மற்றும் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மசாஜ் சென்டர்களில் பணியாற்றி வந்துள்ளனர்.
அவ்வாறு தர்மபுரிக்கு வந்து விட்டு, சென்னைக்கு புறப்பட்டபோது தர்மபுரியில் இருந்து பஸ் இல்லாததால், மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதும், தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு சென்று அங்கிருந்து சென்னை சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு அழைத்து வந்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், இருவரும் சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களை தர்மபுரிக்கு அழைத்து வந்த ஆண் நண்பர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post போலீசாரிடம் வீர வசனம் பேசிய சென்னை ‘குடி’மகள்கள் கைது appeared first on Dinakaran.