மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இங்கு மவுனி அமாவாசை தினத்தில் நடைபெறும் ‘அமிர்த ஸ்நானம்’ நிகழ்ச்சிக்கு 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என முன்பே கூறப்பட்டது. அதன்படியே நேற்று அதிகாலை 1 மணி முதல் பிரயாக் ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராட சென்றனர். சங்கமம் பகுதியில் புனித நீராட பல படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், சங்கமம் முனைப்பகுதி இடத்தில் புனித நீராட பக்தர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.