பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலைக்கு முன்பு 1 – 2 மணிக்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கும்பமேளா டிஐஜி பைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து 15 மணி நேரம் கடந்துவிட்ட நிலையிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தெளிவாக தெரிவிக்காமல் இருந்தனர். இந்தநிலையில், 30 பேர் உயிரிழந்ததாக காவல் துறை மாலையில் தெரிவித்தது.