பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் மிதவை போலீஸ் நிலையம் பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா நேற்று விமரிசையாகத் தொடங்கியது. முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்நிலையில் பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் மிதவை போலீஸ் நிலையத்தை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது.
மகா கும்பமேளா நடைபெறும் 45 நாட்களுக்கும் படகில் அமைக்கப்பட்டு இருக்கும் மிதவை போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீஸார் பக்தர்களுக்கு உதவ உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள், வழிகாட்டுதல்களை போலீஸார் வழங்குவர். இந்நிலையில் மிதவை போலீஸ் நிலையம் ஏராளமான பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று அங்கு வந்துள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.