மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 230 ப்ளஸ் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கிட்டத்தட்ட 50 தொகுதிகளை எட்டவே திணறியது. பாஜக கூட்டணியின் இந்த மகத்தான வெற்றியின் பின்னணி குறித்து பார்ப்போம்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் மகா விகாஸ் அகாதி 30 தொகுதிகளை கைப்பற்றியது. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த உத்தவ் தாக்கரே 9 தொகுதிகளில் வெற்றி பெற்றார். சரத் பவார் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றார். மறுபக்கம் மகாயுதி கூட்டணியில் பாஜக 9, சிவ சேனா 7, அஜித் பவார் 1 என மொத்தம் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.