மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவருடன் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இருந்தார்.
பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிண்டே ராஜினாமா நிகழ்ந்துள்ளது. புதிய அரசு அமையும் வரை ஷிண்டே காபந்து முதல்வராக தொடர்வார் எனத் தெரிகிறது.