மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளன.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங் கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.