தேனி: தமிழக – கேரள எல்லை பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் சுமார் 5000 அடி உயரத்தில் கண்ணகி கோயில் உள்ளது. இது சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கண்ணகிக்கு, சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கோயிலாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத முழு நிலவு அன்று திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற திருவிழாவில் சுமார் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் முன் நின்று செய்து கொடுத்தனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த கோயிலை ஆய்வு செய்து சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து இந்த கோயிலுக்கான தமிழக பாதை மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். இக்கோயிலில் சித்திரை மாதம் மட்டும் திருவிழா கொண்டாடாமல் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் ஐயப்ப கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு விரைவில் விடுதி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இத்திருவிழா காலை முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
The post மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு நாள் விழா: மலை உச்சியில் உள்ள கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.