சென்னை: “மதுரை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழக அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழக அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான தகவலை ரயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா?” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே அமைச்சர் 10-ம் தேதி அன்று மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாகவும், அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழக அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.