மதுரை: மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக ரூ.105 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவையை அடுத்து அதிக பயனாளிகளை கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. 14 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகள் இங்கிருந்து, பயணம் செய்து வரும் நிலையில், 502 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த பழைய விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசு ரூ.200 கோடியில் 633 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. மூன்று விமானங்கள் மட்டுமே நிறுத்தும் விதமாக இருந்த விமான நிலையம் தற்போது, 8 விமானங்கள் வந்து இறங்கி செல்லும்விதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் ஓடுபாதையை தற்போதுள்ளதை விட, 1,500 மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இதற்காக, அரசு உத்தரவுப்படி நீர்வளத்துறை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை, 2 மாதங்களுக்கு முன் துவக்கியது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், இப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. திட்டப்படி விமான நிலையத்தின் கிழக்கு பக்கத்தில் ஓடுபாதையின் தூரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதால், அதற்கேற்ப திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் சின்ன உடைப்பு மற்றும் ஆனைகுளம் கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது.
இப்பணிகளுடன், அங்கு செல்லும் நீர்வழித்தட வாய்க்காலை பலப்படுத்துவது, விமான நிலையத்தின் மேற்கு பக்கத்தில் உள்ள நிலையூர் நீட்டிப்புக்கு கால்வாய் மீது, பாரபட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் வந்து செல்லும் விதமாக, 250 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை அமைப்பது என, பல்வேறு பணிகளுக்காக முதலில் ரூ.205 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், திட்ட அறிக்கையை, மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. இதன்படி, ஓடுதள விரிவாக்கத்திற்காக கண்மாய்களை மூடுவது, அதற்காக அருகில் உள்ள கண்மாய்களிலிருந்து மண்ணை அள்ளுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.105 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
* ரூ.10 கோடியில் கண்மாய்கள் சீரமைப்பு
முதலில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையில், விமான நிலையத்தின் மேற்குப்புற சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள குதிரைகுத்தி உள்ளிட்ட கிராம மக்கள் வந்து செல்ல நிலையூர் கால்வாய் மீது சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் மதிப்பீடு தயாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி ரூ.7.50 கோடி வரை சாலை அமைக்க செலவாகும் என, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பழைய திட்ட அறிக்கையில் இணைக்கப்பட்டிருந்தது. தற்போதைய திட்ட அறிக்கையில் அது கைவிடப்பட்டுள்ளது. எனினும், ஆனைகுளம் மற்றும் சின்ன உடைப்பு கண்மாய்கள் மற்றும் இதற்கு முன்புள்ள எலியார்பத்தி, குசவன்குண்டு, இலந்தைகுளம், கழுவங்குளம் உள்ளிட்ட சங்கிலித்தொடர் கண்மாய்களை தூர்வாரி பலப்படுத்தவும், அவற்றிலிருந்து வெளியேறும் உபரிநீரை கிருதுமால் நதி மற்றும் விராதனூர் வைகை ஆற்றின் கிளை கால்வாயில் இணைக்கும்விதமாக, கால்வாய்களை தூர்வாரவும் ரூ.10 கோடியில் நீர்வளத்துறை தரப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.
The post மதுரை விமான நிலைய ஓடுபாதை ரூ.105 கோடி மதிப்பில் விரிவாக்கம்: மாவட்ட நிர்வாகத்திடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.