மதுரை: மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 30 பேர் பத்திரமாக மதுரை கிளம்பினர். தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரி பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 25 பெண்கள் உள்ளிட்ட 68 பேர் மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த 19ம் தேதி 5 நாள் சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே மதுரையில் இருந்து காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் அனைவரும் இன்று இரவு மதுரைக்கு திரும்புகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்க துணைதலைவர் சித்தார்தன் கூறுகையில், ‘‘மதுரையை சேர்ந்த 30 பேருடன், சென்றுள்ள 68 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாக வீடியோ கால் மூலம் தெரிவித்துள்ளனர். 68 பேரும் பஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்தின் அருகிலுள்ள மற்றொரு இடத்தில் தான் இருந்துள்ளனர். 68 பேரில் ஒருவருக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். அங்கு நடந்த தாக்குதல் குறித்து சுற்றுலா சென்றவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இங்கிருந்து நாங்கள் தான் தகவல் தெரிவித்தோம்’’’ என்றார்.
சுற்றுலா சென்றுள்ள சுப்ரமணியம் கூறுகையில், ‘‘பஹல்காமில் முக்கிய சுற்றுலாத்தலங்களாக சங்காவாலி, பாத்தாவாலி, மற்றும் ஆடுவாலி ஆகிய இடங்கள் உள்ளன. இதன் அருகில் தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடம் உள்ளது. இந்தப் பகுதியில் தான் இருந்து நாங்கள் கிளம்பியப் பிறகு துப்பாக்கிச்சூடு நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த ராணுவத்தினர் சுற்றுலா வந்திருந்த அனைவரையும் அவரவர் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து பஹல்காம் முழுமையும் ராணுவ கட்டுப்பாட்டிற்குற் வந்தது. எங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு, மருத்துவ சிகிச்சையில் இருக்கும் 2 பேர் தவிர்த்து 66 பேரும் மதுரைக்கு திரும்பி விட்டோம். இன்றிரவு மதுரை வந்துவிடுவோம்’’ என்றார்.
The post மதுரையில் இருந்து காஷ்மீர் சென்ற 30 பேர் தப்பினர் நாங்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்: உயிர் தப்பியவர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.