மானாமதுரை: மதுரையை மையமாக கொண்டு தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில், மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்மாவட்ட பயணிகள் விரும்புகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக தென்மாவட்டத்தில் முக்கிய நகரமாக மதுரை உள்ளது. மதுரையில் இருந்து தென்மாவட்டங்களில் முக்கிய நகரங்களான சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தூத்துக்குடி, தென்காசி என தொழில்நகரங்களும், மதுரை திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் என முருகனின் அறுபடை வீடுகளில் 3 படை வீடுகள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி என ஆன்மீக தலங்களும், குமுளி, தேனி ஹைவேவிஸ், கொடைக்கானல் என சுற்றுலாதலங்கள் தென்மாவட்டங்களில் உள்ளன.
கேரளாவிலுள்ள சபரிமலைக்கு செல்வோர் செங்கோட்டை, புனலூர், தேனி வழியை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். கார்த்திகை, மார்கழி மாத சீசன்களில் தென்மாவட்டங்களுக்கு வரும் முருக, ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அதேபோல் நாடு முழுவதும் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி வருவதால் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் பயணிகள் ரயில்கள் நிரம்பி வழிகின்றன.
தென்மாவட்டங்களில் மதுரை, ஒட்டன்சத்திரம், தோவாளை உள்ளிட்ட இடங்களில் காய்கறி சந்தைகளும். தேனி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு பகுதிகளில் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மார்க்கெட்டுகளும் உள்ளன. சாத்தூர், கோவில்பட்டியில் தீப்பெட்டி, கடலை மிட்டாய் என தொழிற்சாலைகள், சிவகாசியில் பட்டாசு, அச்சுத்தொழில் தொழிற்சாலைகளும், ராஜபாளையம் வட்டாரத்தில் நூற்பாலைகள், பஞ்சாலைகள், தென்காசியில் மரத்தொழில்கள், தூத்துக்குடியில் துறைமுகம், தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. அதுசார்ந்த தொழிலாளர்களும் பகல் நேர சேவைக்கு பஸ்களையே நம்பியுள்ளனர்.
மதுரையில் இருந்து இந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டாலும், ரயில்பயணம் போல எளிதான பயணம் இல்லாததால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் வேன், பஸ்களில் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் போதிய அளவில் இணைப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், ‘மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்’எனப்படும் மெமு ரயில்கள் மூலம் போக்குவரத்து வசதிகளை பெருக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட முதன்மையான கோட்டமாக மதுரை கோட்டம் இருந்தது. மதுரையில் இருந்து 10க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதைகளும் இருக்கிறது. மதுரை கூடல் நகரில் மிகப்பெரிய அளவில் சரக்கு கையாளும் பெட்டக வசதியும் உள்ளது. டீசல் எஞ்சின் பணிமனை, ரயில் பராமரிப்பு என்று இருந்தாலும் தென்னக ரயில்வேயில் உள்ள மற்ற அனைத்து கோட்டங்களில் மெமு ரயில் இயக்கப்படும் நிலையில் மதுரை கோட்டத்தில் மட்டும் தற்போது வரை மெமு ரயில்கள் இயக்கப்படாதது வேதனைக்குரியதாக உள்ளது.
மதுரை கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் மெமு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த தீபாவளியின் போது சிறப்பு ரயிலாக மதுரை சென்னை இடையே மெமு ரயில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோவை- திண்டுக்கல் இடையே சோதனை அடிப்படையில் மெமு ரயில் நவம்பர் 30 வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலை தொடர்ந்து மதுரை வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்த்த நிலையில் டிசம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது.
கேரளாவில் மெமு ரயில்கள் நகரங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மதுரை கோட்டத்தை பொறுத்தவரை இன்னமும் பழைய காலத்திய பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகிறது. தென்மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள், சுற்றுலாதலங்கள், தமிழகத்தின் வணிகத் தேவையை நிர்ணயிக்கும் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தினமும் பஸ்களில் தான் வந்து செல்கின்றனர்.
வாகனப் பெருக்கம் அதிகரித்து சாலை மார்க்கமும் நெரிசலாகி வருவதால், மதுரையை அடிப்படையாக கொண்டு திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமேஸ்வரம், தென்காசி, நெல்லை என மெமு ரயில் இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் வசிப்போர் பெருமளவில் பயனடைவர். மெமு ரயில் மூலம் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு என பலரும் நகர் பகுதிகளுக்கு வந்துசெல்ல முடியும். இதன் அடிப்படையில் மெமு ரயில்களை இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்மாவட்டங்களில் தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் பகல் நேர ரயில் போக்குவரத்து இல்லை. அதே போல இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு மட்டுமே செல்கிறது. பகல் நேரங்களில் பயணிகள் திருச்செந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கோ, நெல்லையில் இருந்து மதுரைக்கோ, மதுரையில் இருந்து பழநி அல்லது தேனிக்கோ செல்ல குறிப்பிடும்படியாக ரயில்கள் இல்லை. இதனால் பகல் நேரங்களில் பஸ்களையே நம்ப வேண்டியதுள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு மெமு ரயில்கள் அவசிய தேவையாக உள்ளது.
* குறைந்த செலவில் நீண்ட பயணம்
மானாமதுரை ரயில்பயணிகள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கங்காதரன், பொருளாளர் அப்துல்கரீம் ஆகியோர் கூறுகையில், சென்னையைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்களுக்கான போக்குவரத்து எளிதாக இருக்கிறது. மதுரை கூடல் நகரில் ரயில் எஞ்சின் பணிமனை உள்ளது.
எனவே அங்கு மெமு பணிமனை அமைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய போக்குவரத்து வசதி கிடைக்கும். பஸ் போக்குவரத்தைவிட மிகக்குறைந்த செலவில் பயணத்தை பொதுமக்கள் பெற முடியும். மெமு ரயில் சேவையால் சாமானியர்களின் பணமும், நேரமும் மிச்சமாகும் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும். எனவே மதுரை கோட்டத்தில் மெமு ரயில்களை இயக்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
The post மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு மெமு ரயில்கள் இயக்க வேண்டும்: பகல்நேர விரைவு ரயில் இல்லை, பயணிகள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.