சென்னை: சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த மணி என்ற சுப்பிரமணி மற்றும் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறேன். எனது மகள் மகளிர் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
எனது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக கூறினார். எனது மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் அனைவர் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தனியாக 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தனது தோழி மூலம் அறிமுகமான நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக இருந்து வந்ததாக கூறினார். மேலும், நண்பர்களுடன் ஒன்றாக இருந்தது எனக்கு தவறுதான் என்று தெரியாது என வெகுளித்தனமாக கூறியுள்ளார்.
மேலும், மனவளர்ச்சி குன்றிய மாணவியின் செல்போன் விபரங்களை மகளிர் போலீசார் ஆய்வு செய்து, அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்ட நபர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் அத்தி மஞ்சரிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(20) என்றும் இவர் நந்தனம் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.
மேலும், சுரேஷ் நண்பரான அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், மற்றும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி, சீனு ஆகியோர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. மேலும், மாணவியுடன் படிக்கும் சக தோழியும் ஆண் நண்பர்களுடன் பாதிக்கப்பட்ட மாணவி பழக உடந்தையாக இருந்ததும் விசாரணையில் உறுதியானது.
அதைதொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் தொந்தரவு செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 பேர் மற்றும் தோழி என மொத்தம் 9 பேர் மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருவள்ளூரை சேர்ந்த நந்தனம் கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான பள்ளி சிறுவன் ஆகியோரை நேற்று முன்தினம் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த மணி என்ற சுப்பிரமணி மற்றும் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு அடிக்கடி விலை உயர்ந்த சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
The post மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 பேர் கைது! appeared first on Dinakaran.