புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் தனது உரையை நிகழ்த்தினார். அவரது இந்தி உரையை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அதன் ஆங்கில உரையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர், நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.