மயிலாடுதுறை: பொது மக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ”புதிய விரிவான மினிப்பேருந்துக்கான திட்டம்” உடனடியாக அமுலுக்கு வருகிறது. மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மீவிப்பேருந்திற்கான கட்டண திருத்தமும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் அதிகபட்ச நீளம் 25 கி.மீ. ஆகும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம், மொத்த பாதையின் நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்க கூடாது.
தொடக்கம், முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு, கிராமம் ஆகியவற்றின் பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடமாக இருக்க வேண்டும். முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கி.மீ. தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, இரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை 25 கிமீ நீளத்தை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து மேற்கூறிய இடங்களில் பயணிகள் பயனடையும் வகையில் சேவை பகுதியில் 1.கி.மீ வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம்.
மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது. பழைய மினிப்பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள், இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு எழுத்துபூர்வமாக விருப்பத்தினை அளித்து, பழைய அனுமதிச்சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய திட்டத்தில், குறைந்தபட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக இருக்க வேண்டும். மினிப்பேருந்து இருக்கைகள் 25 ஆக இருக்க வேண்டும். மேலும் மினிப்பேருந்தின் வீல் பேஸ் 390 செமீக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலைப்பேருந்து அல்லது மினிப்பேருந்துகள் 4 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படும் பகுதிகள் சேவை செய்யப்படாத பாதையாக கருதப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்த மினிப்பேருந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் 25 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட அரசிதழ் எண்.1 மற்றும் 2ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள 25 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி கோர விருப்பம் உள்ள பொதுமக்கள், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் மார்ச் 15ம் தேதிக்குள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.
The post மயிலாடுதுறையில் 25 புதிய மினிப்பேருந்து வழித்தடங்களுக்கு அனுமதி: அதிகபட்சம் சேவை தூரம் 25 கிமீ என கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.