சென்னை: மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.1.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம்விரிவாக்கம்,
மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குதல், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன. மயிலாப்பூர், திருவள்ளுவர் திருக்கோயிலானது 61,774 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு திருக்கோயில், கட்டணமுறை வாகன பாதுகாப்பு மையம். திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் முக்கிய வருவாயாக கட்டணமுறை வாகன நிறுத்துமிடம். திருமண மண்டப வாடகையும் உள்ளது. அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் மற்றும் அன்னை காமாட்சி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணி கடந்த 27.04.1973 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டு, 1975 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இத்திருக்கோயிலுக்கு மீண்டும் 2000-ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு 2001-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது.2023-2024ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பின் போது. “சென்னை, மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயிலுடன் இணைந்த திருவள்ளுவர் திருக்கோயிலுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் 19.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தொகுப்புகளாக திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. அதில் திருக்கோயிலை புனரமைப்பு செய்வதற்கு ஏதுவாக 1.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்குள்ள பழைய கட்டடங்களை அகற்றுதல், புதிய வாகன மண்டபம், நூலகம், மடப்பள்ளி மற்றும் சுற்றுசுவர் கட்டும் பணிகளும், 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு.
வாகன நிறுத்தம், பொதுக்கழிப்பிடம் கட்டும் பணிகளும் முதலமைச்சரால் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் திருக்கோயிலில் 2.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கல்லினாலான பொற்றாமரை குளம் அமைத்தல் மற்றும் கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணிகள், 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளுவருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம், பிரகார மண்டபம் மற்றும் திருவள்ளுவர் பிறந்த இடத்திற்கு புதிய கருங்கல்லினாலான மண்டபம் கட்டும் பணிகள். 2.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருள்மிகு வாசுகி அம்மையாருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம் அமைத்தல், புதிதாக கருங்கல்லினாலான முப்பால் மண்டபம் கட்டும் பணிகள்:
2.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சன்னதி மற்றும் மகாமண்டபம் கட்டுதல், காமாட்சியம்மன் சன்னதி. கருமாரியம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி. நடராஜர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகிய சன்னதிகள் கட்டும் பணிகள்; என மொத்தம் 15.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.முத்தமிழறிஞர் கலைஞர் திருக்குறளுக்கு உரை எழுதியதோடு. அய்யன் திருவள்ளுவருக்கு சென்னையில் ஒரு கோட்டத்தையும். கன்னியாகுமரியில் வான் உயர சிலையையும் அமைத்து, அவருக்கு புகழ் சேர்த்தார்.
அவர்தம் வழியில் முதலமைச்சர் குமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடியதோடு, மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் கருங்கல் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தது சிறப்பிற்குரியதாகும். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப.. கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார். இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி, இணை ஆணையர் பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மயிலாப்பூரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, இந்து சமய அறநிலையத் துறை சென்னை மண்டல இணை ஆணையர் கி. ரேணுகாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.