2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சர்ச்சையாகி இருக்கிறது.
கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரை ஒதுக்கித்தான் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் என்ற பெயரில், கோவையில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு விட்டன. இச்சூழலில், நகரின் முக்கிய பசுமைப் பகுதியான திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள நூற்றுக் கணக்கான மரங்களை கிரிக்கெட் மைதான திட்டத்துக்காக அழிக்கப் போகிறார்களே என ஆதங்கப்படுகிறார்கள் பசுமை பாதுகாவலர்கள்.