கோவை: கோவை அருகே நேற்று நள்ளிரவு பனை மரத்தில் பைக் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூரை சேர்ந்த மாதவன் மகன் வீரமணி (33), அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் பிரபு (33), இவரது உறவினரான பழனிசாமி என்பவரின் மகன் கருப்புசாமி (29). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று நள்ளிரவு ஒரே பைக்கில் சிங்கையன்புதூரில் இருந்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சென்று டீ சாப்பிட்டு விட்டு, மீண்டும் சிங்கையன்புதூருக்கு திரும்பி சென்றனர். வீரமணி பைக்பை ஓட்டினார். அப்போது சொக்கனூர் ரோடு காதருத்தா மேடு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் அப்பகுதியில் இருந்த பனை மரத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வீரமணி, பிரபு, கருப்புசாமி ஆகிய 3 பேரும் உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மரத்தில் பைக் மோதி 3 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.