சென்னை: மறுவரை செய்யாமல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒன்றிய பா.ஜ.க. அரசு மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை எந்தெந்த வகையில் வஞ்சிக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் கடுமையாக பாதிக்கப்பட போகும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த அச்சத்தை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி 40 கட்சிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் மிகமிக முக்கியமான பிரச்சினை குறித்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1951 இல் உத்தரபிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6.02 கோடியிலிருந்து 2011 இல் 19.98 கோடியாகவும், மகாராஷ்டிரா 5.04 கோடியிலிருந்து 11.23 கோடியும், பீகார் 4.21 கோடியிலிருந்து 10.38 கோடியும், மத்தியபிரதேசம் 3 கோடியிலிருந்து 7.25 கோடியும், தமிழ்நாடு 4.11 கோடியிலிருந்து 7.21 கோடியாக உயர்ந்திருக்கிறது. குடும்ப கட்டுப்பாட்டை நிறைவேற்றாத உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்கள் தொகை 1951 இல் இருந்து 3 மடங்காக உயர்ந்திருக்கிறது. அதனால், அதனுடைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய மறுசீரமைப்பின்படி 80 இல் இருந்து 143 ஆகவும், பீகார் 40 இல் இருந்து 79 ஆகவும், ராஜஸ்தான் 25 இல் இருந்து 50 ஆகவும், மத்தியபிரதேசம் 29 இல் இருந்து 52 ஆகவும், மகாராஷ்டிரா 48 இல் இருந்து 76 ஆகவும், குஜராத் 26 இல் இருந்து 43 ஆகவும் உயருகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39 இல் இருந்து 49 ஆக உயருகிற வாய்ப்பு தான் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்திற்கு 63 தொகுதிகள் கூடுதலாகவும், தமிழ்நாட்டிற்கு வெறும் 10 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 848 ஆக உயர்த்துவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. அதற்காக தான் மக்களவையில் 888 பேர் அமரக்கூடிய வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திட்டமிட்டு கட்டியிருக்கிறார்.
1971 இல் மக்கள் தொகை 56 கோடியாக இருந்த போது 543 மக்களவைத் தொகுதிகள் என நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நிறைவேற்றிய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டிய போது 1976 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசமைப்புச் சட்டத்தில் 82-வது பிரிவை திருத்தியதன் மூலம் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தார். அதேபோல, வாஜ்பாய் அரசால் 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2007-08 ஆம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டன. அதேபோல, மறுவரை செய்யாமல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. அதற்கு மாற்றாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து மாற்றாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் உத்தரபிரதேசம் மற்றும் பீகாருக்கு முறையே 11 தொகுதிகளும், 10 தொகுதிகளும் கூடுதலாக கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு 8 தொகுதிகள் குறைவாக கிடைக்கிற வகையில் இழப்பு ஏற்படும்.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பது இந்திய அரசின் திட்டமாகும். அதை தீவிரமாக மேற்கொள்கிற மாநிலங்களை ஒன்றிய அரசு ஊக்கப்படுத்தி வந்தது. அதன் காரணமாகத் தான் தமிழகத்தில் 68.6 சதவிகித பெண்கள் குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை பயன்படுத்தியதற்காக கடந்த ஆகஸ்ட் 2022 இல் 36 மாநிலங்களிலேயே மிகச் சிறந்த மாநிலம் என்ற தேசிய விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் தேசிய விருது பெற்று, மக்கள் தொகையை குறைத்ததற்காக தமிழ்நாட்டை வஞ்சிக்கிற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிப்பது மிகப்பெரிய அநீதியாகும். கடந்த காலங்களில் பிரதமர் இந்திரா காந்தி, பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் ஒவ்வொருவரும் 25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்புக்கு கால நீட்டிப்பு வழங்கி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்ததைப் போல, தற்போதைய மோடி அரசும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்பதன் மூலமே தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்படும்.
எனவே, வருகிற 5 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டியிருக்கிற அனைத்து கட்சி கூட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு மக்களவையில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மறுவரை செய்யாமல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த பாஜக முயற்சி: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.