சேலம்: சேலத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் காரணமாக கந்தம்பட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சீராகி இருக்கிறது. இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை கந்தம்பட்டி பகுதியில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏற்காட்டில் பெய்த கனமழையின் காரணமாக திருமணிமுத்தாற்றின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. திருமணிமுத்தாற்றின் கரையோரம் இருக்கும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. ஏற்காடு மலைப்பகுதியில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கிராமங்களுக்கு செல்லக்கூடிய தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளியங்கடை கிராம தரைப்பாலம் சேதமாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் அரசு சீர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை புயல் வரும்போதும் ஒன்றிய அரசிடம் நிதி கேட்பது வழக்கம். பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசை அணுகி நிதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மழை பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசிடம் நிதி பெற வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.