நல்லம்பள்ளி : கோம்பேரி கிராமத்தில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி கோம்பேரி கிராமம், மலை அடிவாரப் பகுதியில் உள்ளதால், பல நூறு ஏக்கர் பரப்பில் நெல், வாழை, மஞ்சள், சோளம், ராகி, கரும்பு மற்றும் வெற்றிலை தோட்டம் என விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த வாரம் பெய்த கனமழையால், கோம்பேரி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயராக இருந்த நெல், ராகி, சோளம் ஆகிய பயிர்களில் மழை வெள்ளம் புகுந்து இன்றுவரை வடியாமல் மழை நீரில் மூழ்கி பல லட்சம் மதிப்பிலான நெல், ராகி, சோளம் ஆகிய பயிர்கள் அழுகி சேதமடைந்தது. மழை வெள்ளத்தால் கேம்பேரி கிராமத்தில் அழுகி சேதமடைந்த பயிர்களை, இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோம்பேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று, மழை வெள்ளத்தில் மூழ்கி நிலத்திலேயே அழுகிப்போன பயிர்களை கையில் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அழுகிய பயிர்களுக்கு அரசு உரிய கவனம் செலுத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறினால் கோம்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அழுகிப்போன நெல், வாழை, சோளம், ராகி ஆகிய பயிர்களை டிராக்டர்களில் கொண்டு வந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விரைவில் தர்ணா போராட்டம் நடத்துவோம்,’ என்றனர்.
The post மழை வெள்ளத்தில் மூழ்கி சேதம் நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.