தஞ்சாவூர்: மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை பாதிப்படைந்தள்ளதால் ரூ.1.50 கோடி வாழை இலை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதால் தஞ்சை விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, வடுகக்குடி, திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி, நடுக்காவிரி, நடுக்கடை, கண்டியூர் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பூவன் ரக வாழைகளை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதி வாழை இலைகள் சற்று தடிமனாக இருப்பதால் தமிழகம் முழுவதும் தனி மவுசு உண்டு. சென்னைக்கு அதிகளவில் இங்கிருந்து தான் வாழை இலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இலைகளை அனுப்புகின்றனர். திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினம்தோறும் 25 லட்சம் வாழை இலைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.
இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வாழை தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் பாதிக்கும் மேற்பட்ட வயல்களில் தண்ணீர் வடிந்து விட்டது. சில இடங்களில் மட்டும் அப்படியே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாழை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாளாக திருவையாறு பகுதியில் இருந்து வாழை இலைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தடைபட்டுள்ளது.
இதுகுறித்து வாழை சாகுபடி விவசாயிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வாழை சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கியது. 3 மாதங்களே ஆன வாழைக்கன்றுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக வாழை இலை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட முடியவில்லை. கடந்த 5 நாட்களில் மட்டும் 1.25 லட்சம் வாழை இலைகள் அனுப்பாததால் ₹1.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
The post மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை பாதிப்பு; ரூ.1.50 கோடி வாழை இலை வர்த்தகம் பாதிப்பு: தஞ்சை விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.