வரலாற்றில் ஒருவருக்கு என்ன இடம் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நவீன தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு என்ன இடம் கிடைக்கும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நமது அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும். மாநில உரிமை என்று கூறினாலே, அதைத் திமுகவுடன் இணைத்துப் புரிந்துகொள்வது என்பதுதான் காலம் காலமாக இருக்கும் ஒரு வழக்கம். ஆனால், ஜெயலலிதாவின் மாநில உரிமைகள் குறித்த பங்களிப்பும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த்து.
2011-க்குப் பிந்தைய ஜெயலலிதாவின் அணுகுமுறைகள், அவரது முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், பல வித்தியாசங்களைக் காட்டின. அதில் ஒன்று, மாநில உரிமைகள் தொடர்பாக மத்திய அரசுகளோடு அவர் முரண்பட்டது. இத்தனைக்கும் தன் மீதான வழக்குகள் உட்படப் பல காரணங்களுக்காக டெல்லி விவகாரங்களில் கவனம் காட்ட வேண்டிய நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்.