நாட்டின் இரண்டாவது பொதுத் தேர்தல் 1957-ல் நடந்து முடிந்தது. அப்போதெல்லாம், நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெறுவது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜவஹர்லால் நேரு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை குடியரசுத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வானார்.
சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசாங்கம் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையில் கேரளத்தில் ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் பொதுத் தேர்தல் முடிந்து 13.4.1957-ல் முதல்வராக காமராஜர் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஏ.ஜே.ஜான் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, அமைச்சர்கள் பதவியேற்றனர்.