மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஒன்றிய அரசு மூலம் ரூ.30 கோடியில் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் உலக அளவில் சுற்றுலாவிற்கு பெயர் போன நகரமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை செதுக்கினர். இந்த புராதன சின்னங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், பழங்கால கோயில்கள், பாரம்பரிய நினைவு சின்னங்கள், மன்னர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதில், குறிப்பாக மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் அழகுர செதுக்கிய புராதன சின்னங்களை பார்வையிட்டு, அதனை செதுக்கிய மன்னர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள ஆண்களை விட பெண்களே அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
மாமல்லபுரம் வரும் வெளிநாட்டினர் இங்குள்ள ரிசார்ட்டுகளில் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தங்கி ஜாலியாக சுற்றுகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கடற்கரை, சுற்றுலாப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பது அவசியமாக உள்ளது. மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களால், சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் இல்லாமல் காலியாக காணப்பட்டது. மேலும், கடற்கரை கோயில் செல்லும் வழி, கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகள் சாலையை ஆக்கிரமித்ததால் சாலைகள் குறுகி காணப்படுகிறது.
இதனையடுத்து, ஒன்றிய அரசின் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. கடந்தாண்டு, கடற்கரை பகுதியில், 20க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தை, கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ஆனால், பணிகளை துவங்க இடத்தை தேர்வு செய்வதில் பெரிய அளவிலான குழப்பம் நீடித்து வந்தது. இதனால், சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டது. கடந்த, பிப்ரவரி 9ம் தேதி செங்கல்பட்டு டிஆர்ஓ சேக் முகையதீன் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆய்வு செய்து சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்துக்கு இடத்தை தேர்வு செய்தார்.
இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், எந்த இடையூறும் இல்லாமல் சுலபமாக வந்து ஜாலியாக பொழுதை கழிக்கும் வகையில், கடற்கரைக்கு அருகே 20 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி, அலங்கார வளைவு, சாலை வசதி, கழிப்பறை, உணவகம், சிசிடிவி கேமரா, பசுமை புல்வெளி, அலங்கார மின் விளக்குகள், சங்கு மணி விற்கும் கடை, பயணிகள் அமர இருக்கைகள், முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் 64 சாலையோர கடைகளை அழகுபடுத்துதல் என பல்வேறு மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில், அனைத்து பணிகளும் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்ட பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, உள்ளூர் மக்கள் கூறுகையில், மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது அவசியமாக உள்ளது. அந்த வகையில், மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் ரூ.30 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை, கடந்தாண்டு பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கடற்கரையொட்டி, ரூ.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு சுற்றுலாத் துறை மேற்கொள்ள உள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பணிகளை, கால தாமதமின்றி விரைந்து தொடங்கி, உடனடியாக முடிக்க வேண்டும். அப்படி முடிக்கும் பட்சத்தில் இந்தாண்டு இறுதியில் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவார்கள் என எதிர் பார்க்கலாம்’ என்றனர்.
The post மாமல்லபுரத்தில் ஒன்றிய அரசின் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம்; ரூ.30 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.