மாமல்லபுரம்: தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தெப்பகுளத்தில் படர்ந்துள்ள பாசிகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோயிலில், மாசி மகம் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் பாசிகள் அகற்றப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் பேருந்து நிலையம் பின்புறம் தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு, சொந்தமான புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளம் கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த மழையில் குளத்தில் ஓரளவு தண்ணீர் தேங்கியது. அதன்பிறகு குளம் முழுவதும் பாசி படர்ந்து அலங்கோலமாக காணப்படுகிறது.
இந்நிலையில், வரும் 13ம் தேதி மாசி மகத்தையொட்டி புண்டரீக புஷ்கரணி தெப்பகுளத்தில் தெப்ப உற்சவமும், மறுநாள் 14ம் தேதி காலை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. எனவே, தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு புண்டரீக புஷ்கரணி தெப்பகுளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என ஆன்மிக பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, கடந்த 4ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, புண்டரீக புஷ்கரணி தெப்பகுளத்தில் படர்ந்துள்ள பாசிகளை உபயதாரர் உதவியுடன் தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் படகு மூலம் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு ஆன்மிக பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
The post மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோயில் தெப்பகுளத்தில் பாசிகள் அகற்றம் appeared first on Dinakaran.