சேலம்: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில் அமைந்துள்ள ஆனைமடுவு அணையின் மதகுகளில் ஒன்று, மின்சார கோளாறு காரணமாக, புதன்கிழமை காலை திடீரென திறந்து கொண்டதில், அணையில் இருந்து நீர் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மின்சார கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மதகு மூடியது. திடீரென மதகு திறந்து நீர் வெளியேறியதால், அணையின் நீர் மட்டம் 0.25 அடி குறைந்தது.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில், ஆனைமடுவு ஆற்றின் குறுக்கே75.45 உயரம் கொண்ட ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் நீர் வசிஷ்ட நதியில் கலந்து, கடலூர் அருகே கடலில் கலக்கிறது. கடந்த வட கிழக்குப் பருவமழையின்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஆனைமடுவு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆனைமடுவு அணை முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.