ஹைதராபாத்: இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட், இணையதளம் வழி பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அரங்கேறுவது தெரியவந்துள்ளது. அதிலும், இந்தியாவைச் சேர்ந்த சில முகவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களை இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்க வைத்து விடுகின்றனர்.
அந்த வகையில், மியான்மர்-தாய்லாந்து எல்லையில் மியாவாடி என்ற பகுதி ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்தபடி சைபர் மோசடி கும்பல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர் முகவர்கள் மூலம் வேலைக்காக சென்று சிக்கிக் கொண்டவர்கள் ஆவர். இவர்களால் மீண்டு வரமுடியாததால் வேறு வழியின்றி இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் விருப்பப்பட்டு பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது.