மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டேனியலி காலின்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் ஒசாகா, ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 7-5, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பையை வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். மற்ற ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), கேஸ்பர் ரூட் (நார்வே), ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் வெற்றி கண்டனர்.