பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பும், 2வது பகுதி கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்டது. கடந்த மிக்ஜாம் புயலில், இந்த பள்ளியின் சுற்றுச்சுவரின் வடமேற்கு பகுதியில் இடிந்து விழுந்தது. பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இடிந்து விழுந்தது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பெஞ்சல் புயல் காரணமாக இப்பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அருகில் உள்ள புதர்களில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள், சில நேரங்களில் பள்ளி வகுப்பறைக்குள் ஊர்ந்து செல்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே விரைவில் இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை மீண்டும் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மீஞ்சூர் அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதம் appeared first on Dinakaran.