ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ‘ஸ்லாப்கேட்’ என்று வர்ணிக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டது குறித்து பலரும் சாடி வருகின்றனர்.
அஸ்வின் அந்த வீடியோ வெளியீட்டைக் கண்டிக்கையில், ‘அனகோண்டாவின் தலை மீண்டும் மீண்டும் எழும்புகிறது’ என்று வர்ணித்துள்ளார். அஸ்வின் தன் யூடியூப் சேனலில் இது தொடர்பாகக் கூறியபோது, “அனகோண்டாவின் தலை திரும்பவும் எழும்புகிறது. இந்த நவீன யுகத்தில் அனைத்தைப் பற்றியும் இங்கும் அங்கும் வீடியோ பதிவுகள் செய்யப்படுகின்றன. ஆகவே இப்படிப்பட்ட சம்பவங்கள் திரும்பத் திரும்ப பொதுவெளிக்கு வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இரு வீரர்களின் வாழ்க்கையில் இந்தச் சம்பவம் ஒன்றும் பெருமைக்குரியதாக இருக்கப் போவதில்லை. பின் எதற்காக அதை மீண்டும் வெளியிட வேண்டும்?