*காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு ஏற்பாடு
தர்மபுரி : தர்மபுரி ராமக்காள் ஏரியை மீண்டும் அழகுபடுத்தி காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள, வரும் 10ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் நகர எல்லையில் 265 ஏக்கர் பரப்பளவில் ராமக்காள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து தண்ணீர் வரும். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். இதன் உபரிநீர் சனத்குமாரநதியில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேரும். சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணை நிரம்பி உபரிநீர் சோகத்தூர் ஏரி, கடகத்தூர் ஏரி நிரம்பி ராமக்காள் ஏரிக்கு தண்ணீர் வரும். இந்த ராமக்காள் ஏரியை நம்பி 300க்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன. நெல், கரும்பு மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஏரியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும்போது, கடல் போல் காட்சியளிக்கும்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் ஏரியை சுற்றி பார்க்கும் வகையில், கடந்த திமுக ஆட்சியில் ராமக்காள் ஏரியை அழகு படுத்த வேண்டும் என்று, நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்புடன் ஏரியில் பறவைகள் தங்கு வகையில் தீவு திடல் அமைக்கப்பட்டது. ₹2.81 கோடி மதிப்பீட்டில் பூங்கா, சுற்றுலா பயணிகள் இளைப்பாறுவதற்கு இருக்கை, நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை, செடிகள் மற்றும் வேலி அமைத்து, கழிப்பறை அமைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் முறையாக பூங்காவை முறையாக பராமரிக்காததால், பூங்காவில் செடிகள் வளர்ந்து புதர்மண்டியது. நடைபயிற்சி மேடையில் கற்கள் பெயர்ந்து சிதறியது. பூங்கா வளாகம் மதுகுடிக்கும் இடமாக மாறியது. மேலும் மது குடித்து பாட்டில்களை ஏரியிலும், அங்கேயே வீசிச்செல்கின்றனர். பிளாஸ்டிக் பை, டம்ளர், பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன.
இரவு நேரம் சமுகவிரோத கூடாரமாக ராமக்காள் ஏரி தற்போது மாறியுள்ளது. ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகளும் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியை தூர்வார வேண்டும். கழிவுநீர் நேரடியாக கலக்காமல் சுத்திகரித்து ஏரிக்குள் அனுப்ப, மாவட்ட நிர்வாகம், நகராட்சி துறை, பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ராமக்காள் ஏரியை அழகுப்படுத்தி மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மதுகுடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது குடித்தால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், ராமக்காள் ஏரியை அழகுப்படுத்தும் பணிகள் குறித்து, அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், தர்மபுரி நகராட்சி பகுதிக்குட்பட்ட ராமக்காள் ஏரியை தூய்மை செய்து, பூங்கா அமைப்பது குறித்தும், பூச்செடிகள் அமைப்பது குறித்தும், வண்ண மிலிரும் தட்டிகள் அமைப்பது குறித்தும் மற்றும் நடை பயிற்சியாளர்களுக்கு மின்விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், நகராட்சி ஆணையர் சேகர், தர்மபுரி டிஎஸ்பி சிவராமன், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் நடை பயிற்சியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ராமக்காள் ஏரியை வரும் 10ம் தேதி முதல் தூய்மை பணிகள், அழகுப்படுத்தும்பணி மேற்கொள்ளப்படும். ஒரு காவலாளி நியமனம் செய்யப்படும்.
அதிகாலை 4.30 மணி முதல் பகல் 9 மணிவரையும், மாலை 4 மணி முதல் 7 மணிவரை மட்டுமே, ராமக்காள் ஏரி நடைபயிற்சிக்கு திறக்கப்படும். மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அவ்வவ்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். ராமக்காள் ஏரி பகுதிகளில் யாரும் மது அருந்தக்கூடாது. ராமக்காள் ஏரி பகுதியில் மது அருந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
கழிவுநீர் கலப்பால் மாசடையும் அவலம்
தண்ணீர் தேங்கியிருந்தால், தர்மபுரி நகரம் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். போர்வெல், கிணறுகளில் தண்ணீர் மேலே இருக்கும். தற்போது சின்னாறு அணையில் இருந்து ராமக்காள் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை.
கடந்த 2022ம் ஆண்டு மட்டும் சின்னாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், ராமக்காள் ஏரிக்கு வந்தது. அதன்பின் வரவில்லை. மழைநீர் மட்டுமே ஏரிக்கான நீர் ஆதாரமாக உள்ளது. நாளடைவில் தர்மபுரி நகரத்தில் உள்ள கழிவுநீரும் ராமக்காள் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், ஏரி மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
The post மீண்டும் புதுப்பொலிவடையும் ராமக்காள் ஏரி appeared first on Dinakaran.